கணபதி துணை

தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின்

சைவ வினாவிடை
 

7. பதி இயல்
 

1. உலகத்துக்குக் கருத்தா யாவர்?

சிவபெருமான்.

2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்?

நித்தியரும், சருவவியாபகரும், அநாதிமலமுத்தரும், சருவஞ்ஞரும், சருவகர்த்தாவும், நித்தியானந்தரும், சுவதந்திரருமாய் உள்ளவர்.

3. நித்தியர் என்பது முதலிய சொற்களுக்குப் பொருள் என்ன?

நித்தியர் = என்றும் உள்ளவர்; சருவவியாபகர் = எங்கும் நிறைந்தவர்; அநாதிமலமுத்தர் = இயல்பாகவே பாசங்களின் நீங்கினவர்: சருவஞ்ஞர் = எல்லாம் அறிபவர்; சருவகர்த்தா =எல்லாம் செய்பவர்; நித்தியானந்தர் = என்றும் மகிழ்ச்சியுடையவர்; சுவதந்திரர்=தம்வயமுடையவர்.

4. சிவபெருமான் செய்யும் தொழில்கள் எவை?

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துமாம்.

5. இவ்வைந்தொழிலுஞ் சிவபெருமான் செய்வது தம் பொருட்டோ பிறர் பொருட்டோ?

தம்பொருட்டன்று; ஆன்மாக்களாகிய பிறர் பொருட்டே. [ஆன்மா, பசு, புற்கலன் என்பவை ஒரு பொருட் சொற்கள்.]

6. படைத்தலாவது யாது?

ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும் தோற்றுவித்தல்.

7. காத்தலாவது யாது?

தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன் போகங்களை நிறுத்தல்.

8. அழித்தலாவது யாது?

தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தில் ஒடுக்குதல்

9. மறைத்தலாவது யாது?

ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்துதல்.

10. அருளலாவது யாது?

ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச் சிவத்துவத்தை விளக்குதல்.

11. தனு கரண புவன் போகம் என்றது என்னை?

தனு = உடம்பு; கரணம் = மன முதலிய கருவி; புவனம் = உடம்புக்கு ஆதாரமாகிய உலகம். போகம் = அநுபவிக்கப்படும் பொருள்.

12. ஒரு காரியத்திற்கு காரணம் எத்தனை?

முதற் காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் என மூன்றாம். குடமாகிய காரியத்துக்கு முதற் காரணம் மண், துணைக் காரணம் திரிகை, நிமித்த காரணம் குயவன். திரிகை - சக்கரம்.

13. தனு கரண புவன் போகம் எனப்படும் பிரபஞ்சமாகிய காரியத்திற்கு முதற்காரணம் துணைக்காரணம் நிமித்த காரணம் எவை?

முதற் காரணம் சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி என மூன்று. துணைக்காரணம் சிவசக்தி; நிமித்த காரணம் சிவபெருமான்.

14. சிவசத்தியாவது யாது?

அக்கினியோடு சூடு போலச் சிவத்தோடு பிரிவின்றி உள்ளதாகிய வல்லமை.

15. சிவபெருமானுக்கு உரிய வடிவம் எவை?

அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்றுமாம்.

16. சிவபெருமான் இம்மூவகைத் திருமேனியையுடைய பொழுது எவ்வெப் பெயர் பெறுவர்?

அருவத் திருமேனியையுடைய பொழுது சிவன் எனவும், அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சதாசிவன் எனவும், உருவத் திருமேனியையுடைய பொழுது மகேசுவரன் எனவும் பெயர் பெறுவர்.

17. சிவபெருமானுடைய உருவம் ஆன்மாக்களாகிய நம் போலிகளுடைய உருவம் போன்றதா?

ஆன்மாக்களுடைய உருவம் இருவினைக்கு ஈடாகித் தோல், எலும்பு முதலிய தாதுக்களால் உண்டாகிய உருவம்; சிவபெருமானுடைய உருவம், ஆன்மாக்கள் செய்யுந் தியானம், பூசை முதலியவைகளின் பொருட்டுச் சிவசத்தியாகிய திருவருட் குணங்களுள் இன்னது இன்னது, இன்ன இன்ன அவயவம் என்று பாவிக்கப்படும் உருவம்.

18. சிவபெருமான் ஐந்தொழிலுந் தாமே செய்வாரா?

சுத்தமாயையிற் கிருத்தியம் ஐந்துந் தாமே செய்வார்; அசுத்தமாயையிற் கிருத்தியம் ஐந்தும் அனந்தேசுரரை அதிட்டித்து நின்று செய்வார்; பிரகிருதியின் கீழ் உள்ள கிருத்தியம் ஐந்தும் அவ்வனந்தேசுரர் வாயிலாக ஸ்ரீகண்டருத்திரரை அதிட்டித்து நின்று செய்வார். ஸ்ரீகண்டருத்திரர் பிரமாவை அதிட்டித்து நின்று படைத்தலும், விட்ணுவை அதிட்டித்து நின்று காத்தலும், காலருத்திரரை அதிட்டித்து நின்று அழித்தலுஞ் செய்வார். [அதிட்டித்தல்=நிலைக்களமாகக் கொண்டு செலுத்துதல்]

19. ஸ்ரீகண்டருத்திரர் இன்னும் எப்படிபட்டவர்?

சைவாகமங்களை அறிவிக்கும் ஆசாரியர்; பிரமா, விட்டுணு முதலிய தேவர்களுக்கும் இருடிகளுக்கும் அறுபத்துமூவர் முதலாயினோர்களுக்கும் நிக்கிரக அநுக்கிரகங்களைச் செய்யுங் கருத்தா; சைவத்திற் புகுந்து சமயதீ?க்ஷ பெற்றவர்கள் வழிபடும் மூர்த்தி.

20. பிரமா, விட்டுணு, உருத்திரன், மகேசுரன் சதாசிவன் என்னும் ஐவருடைய சத்திகளுக்குப் பெயர் என்ன?

பிரமாவினுடைய சத்தி சரஸ்வதி; விட்டுணுவினுடைய சத்தி இலக்குமி; உருத்திரனுடைய சத்தி உமை; மகேசுரனுடைய சத்தி மகேஸ்வரி; சதாசவினுடைய சத்தி மனோன்மணி.

21. ஆன்மாக்களாலே பூசித்து வழிபடப்படுஞ் சதாசிவ வடிவம் யாது?

பீடமும் இலிங்கமுமாகிய கன்மசாதாக்கிய வடிவமாம். பீடஞ் சிவசக்தி, இலிங்கஞ் சிவம்.

22. இலிங்கம் என்பதற்குப் பொருள் என்னை?

படைத்தல், காத்தல் முதலியவைகளினால் உலகத்தைச் சித்திரிப்பது [லிங்க=சித்திரித்தல்]

23. மகேசுர வடிவம் எத்தனை?

சந்திரசேகரர், உமாமகேசர், இடபாரூடர், சபாபதி, கல்யாணசுந்தரர், பிக்ஷ?டனர், காமாரி, காலாரி, திரிபுராரி, சலந்தராரி, மாதங்காரி, வீரபத்திரர், ஹரியத்தர், அர்த்தநாரீசுரர், கிராதர், கங்காளர், சண்டேசாநுக்கிரகர், நீலகண்டர், சக்கரப்பிரதர், கசமுகாநுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏகபாதர், சுகாசீனர், தக்ஷ?ணாமூர்த்தி, லிங்கோற்பவர் என்னும் இருபத்தைந்துமாம்.
 

திருசிற்றம்பலம்

 1. கடவுள் இயல்  
 2. புண்ணிய பாவ இயல்  
 3. விபூதி இயல்-1  
 4. சிவ மூலமந்திர இயல்  
 5. சிவாலய தரிசன இயல்  
 6. தமிழ் வேத இயல்  
 7. பதி இயல்  
 8. விபூதி இயல்-2  
 9. உருத்திராக்ஷவியல்  
 10. சிவலிங்கவியல்  
 11. பஞ்சாக்ஷரவியல்  
 12. நித்திய கரும இயல்

Home Page Arumuga Navalar's home page Yogaswami's home page

Return to Top